இளைஞர் பிட்டு டபாகி 
தேசிய செய்திகள்

குப்பைத்தொட்டி திருட்டு: நதிக்கரையைத் தூய்மைப்படுத்திய இளைஞர் வேதனை

இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போபால்,

மத்தியப் பிரதேசம் மாநிலம் ராஜ்கரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் நதிக்கரையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டி ஒரே இரவில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமனிதனாக நதியை மீட்டெடுக்கப் போராடிய இளைஞரின் உழைப்பை வீணடிக்கும் வகையில் நடந்துள்ள இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

8 மாத கால தனிமனிதப் போராட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் பாய்கிறது அஜ்னார் நதி. இந்த நதி குப்பைகள் நிறைந்து மாசடைந்ததைக் கண்டு வேதனையடைந்த சுரேந்திர சிங் சவுத்ரி (இளைஞர் பிட்டு டபாகி) என்ற 20 வயது இளைஞர், கடந்த 8 மாதங்களாக தனி ஆளாக நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவரது கடுமையான உழைப்பால் நதி படிப்படியாகப் பொலிவு பெற்றது.

உழைப்பை வீணடித்த திருட்டுச் சம்பவம்

நதி தூய்மை செய்யப்பட்ட பிறகும், பொதுமக்கள் மீண்டும் நதிக்கரையில் குப்பைகளைக் கொட்டி வந்தனர். இதைக் கட்டுப்படுத்த நினைத்த பிட்டு டபாகி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் குப்பைகளை முறையாகப் போடுவதற்காக தனது சொந்த செலவில் 2 பெரிய குப்பைத்தொட்டிகளை (பேரல்கள்) வாங்கி, அவற்றை நதிக்கரையில் உள்ள மரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி வைத்தார். ஆனால், அவர் குப்பைத்தொட்டிகளை வைத்த அடுத்த நாள் காலையிலேயே, யாரோ மர்ம நபர்கள் கயிற்றை அறுத்து, அங்கிருந்த ஒரு பெரிய குப்பைத்தொட்டியைத் திருடிச் சென்றுவிட்டனர்.

இளைஞரின் கண்ணீர் வேதனை

தன் உழைப்பு வீணடிக்கப்பட்டதைக் கண்டு மனமுடைந்த இளைஞர் பிட்டு டபாகி, இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் இந்த குப்பைத்தொட்டிகளை எனது சொந்தப் பயன்பாட்டிற்காக வைக்கவில்லை. மக்கள் நதியை மீண்டும் மாசுபடுத்துவதைத் தடுத்து, குப்பைகளை முறையாகப் போடுவதற்காகவே வைத்தேன். ஆனால், பொதுமக்களின் வசதிக்காக வைக்கப்பட்ட பேரலையும் திருடிச் சென்றுவிட்டனர். இத்தகைய மக்கள் இருக்கும் வரை நம் நாடு எப்படி முன்னேறும்?" என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் கோரிக்கை

சுற்றுச்சூழலைக் காக்க ஒரு தனிமனிதன் எடுக்கும் இத்தகைய கடினமான முயற்சிகளுக்கு, பொதுமக்களின் சில பொறுப்பற்ற செயல்களும், சமூகப் பொறுப்பின்மையும் முட்டுக்கட்டையாக இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT