இடுக்கி,
தமிழக - கேரளம் மாநில எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குவது உலகப் புகழ்பெற்ற தேக்கடி ஏரி ஆகும்.
இந்த தேக்கடி ஏரியில், கேரள மாநில சுற்றுலாத்துறை சார்பிலும், பெரியாறு புலிகள் காப்பகம் சார்பிலும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகளில் சவாரி செய்தபடியே, அணையின் எழில்மிகு நீர்ப்பிடிப்பு பகுதிகள், அடர்ந்த பசுமை மாறா காடுகள் மற்றும் அங்கு உலா வரும் யானை, மான் போன்ற வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர்.
இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தேக்கடிக்கு குடும்பம் குடும்பமாக வந்து குவிகிறார்கள்.
இந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் பெய்யாமல் முற்றிலும் பொய்த்துப் போனது. தற்போது பருவமழைக் காலம் என்று கூறப்பட்டாலும், வழக்கத்திற்கு மாறாக கோடைகாலத்தை மிஞ்சும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்தரி வெயில் போல் வாட்டி வதைக்கும் இந்த வெயிலால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தொடர்ந்து மழை இல்லாத காரணத்தினால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் மிகக் கடுமையான முறையில் சரிந்து, மிகவும் அடிமட்டத்தை எட்டியுள்ளது. அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு காணப்படுவதால், வரும் நாட்களில் தேக்கடி ஏரியின் படகு சவாரி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சுற்றுலா பயணிகளும், வணிகர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக பாசனத்துக்கு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், அணையில் போதிய அளவில் நீர் இல்லாததால் இந்த ஆண்டு இதுவரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடி என்றாலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி 142 அடிவரை மட் டுமே தேக்கி வைக்க முடியும்.
நேற்று அணையின் நீர்மட்டம் 111.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 175 கன அடியாகவும், அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் அளவு வினாடிக்கு 256 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர் இருப்பு 1,223 மில்லியன் கன அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை 29) அணையின் நீர்மட்டம் 135.15 அடியாக வும், நீர் இருப்பு 5,904 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
கடந்த மே மாதத்தில் இருந்தே அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. படகு சவாரி செய்வதற்கு ஏரிக்குள் இறங்கி நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கும் இந்த படகு சவாரி திருப்திகரமான அனுபவத்தை கொடுப்பதில்லை. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளதால் அப்பகுதி களை இழந்து காணப்படுகிறது.
இதற்கிடையே நீர்மட்டம் குறைவு காரணமாக, படகுகள் இயக்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆழம் குறைவான இடத்தில் படகு செல்லும் போது அதிக பாரம் இருந்தால் தரைதட்டும் என்பதால், சுற்றுலா பயணிகள் முழுமையாக ஏற்றப்படுவது இல்லை.
சுற்றுலா படகுகளில் சுமார் 60 சதவீத இருக்கைகள் அளவுக்கு தான் சுற்றுலா பயணிகள் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும் 40 சதவீத இருக்கைகள் காலியாக இருக்கும் வகையில் படகு இயக்கப்படுகிறது. மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே தேக்கடி ஏரி மீண்டும் களைகட்டும்.