தேசிய செய்திகள்

தேசிய தூய்மை விருது பெற்ற தேனி அல்லிநகரம்

விருதுகள் 5 பிரிவுகளில் 60 நகரங்களுக்கு வழங்கப்பட்டன.

புதுடெல்லி,

தேசிய தூய்மை நகர விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.

தூய்மை நகர விருது

பொதுமக்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், நகர்ப்புற ஆற்றங்கரை பகுதிகளை விரிவுபடுத்துதல், திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தடுத்தல், சுற்றுலா மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தூய்மையை பேணுதல், பள்ளிகளில் நடத்தை மாற்ற முன்னெடுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை அளவு கோல்களாகக் கொண்டு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தூய்மை நகர விருதுகளை வழங்கி வருகிறது.

சூப்பர் தூய்மை லீக் விருது

இந்த வகையில் 2025-2026-ம் ஆண்டுக்கான 10-வது தூய்மை விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு தூய்மை விருதுகளை வழங்கினார்.

விருதுகள் 5 பிரிவுகளில் 60 நகரங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் சூப்பர் தூய்மை லீக் விருது நவிமும்பை, சூரத் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வழங்கப்பட்டன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் விசாகப்பட்டினம். ஜபல்பூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் விருது பெற்றன.

தேனி அல்லிநகரம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக மாநிலத்தின் சிறந்த தூய்மை நகர விருது என 30 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் தேனி அல்லிநகரம் நகராட்சி விருது பெற்றது. நகர்ப்புற கழிவு மேலாண்மையில் சிறந்த நகரமாக ஆமதாபாத், இந்தூர், திருப்பதி உள்ளிட்ட நகரங்கள் விருது பெற்றன.

தீவிர பங்களிப்பு

நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்தின் முயற்சிகளாலும் மட்டும் தூய்மையை அடைய முடியாது என்றும், அதற்கு அனைத்து தரப்பினரின் தீவிரப் பங்களிப்பு தேவை என்றும் கூறினார். குடிமக்கள் பங்கேற்பு, நடத்தை மாற்றம், நிர்வாகப் பொறுப்புக்கூறல் மற்றும் தொடர்ச்சியான பொது ஈடுபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

விருது விழாவில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர்லால், செயலாளர் சதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT