கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தி.மு.க. - காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே ரகசிய புரிதல் உள்ளது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தி.மு.க. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ரகசிய புரிதல் உள்ளதாக மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நேற்று நடியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, “நீங்கள் மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் காலத்தில் மட்டும் படையெடுக்கிறீர்கள். ஆனால் பாகிஸ்தான் கொல்கத்தாவை தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்தபோது நீங்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் நாட்டுக்கு எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும் ஏற்க மாட்டோம். அதேவேளை கொல்கத்தாவுக்கு மிரட்டல் வந்தாலும் சும்மா விடமாட்டோம்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் இருந்து பல அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு உங்களுக்கும் (பா.ஜனதாவுக்கும்) காங்கிரஸ் மற்றும் ஸ்டாலினுக்கும் இடையே ஏதோ ஒரு ரகசிய புரிதல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 500 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதேவேளையில் மற்ற மாநிலங்களில் மிகச் சில அதிகாரிகளை மட்டுமே இடமாற்றம் செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தங்கள் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், பா.ஜனதாவினர் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்து வருகின்றனர்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி அரசியலில் பா.ஜனதாவை வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் செயல் படும். அதற்காகத் தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவோம்” என்று அவர் கூறினார்.