புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) உள்பட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நேற்று போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், சி.ஜே.பி. போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்-மந்திரியுமான பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தையொட்டி, அக்டோபர் 10ம் தேதி (நேற்று) போக்குவரத்து சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , டெல்லி மெட்ரோ உள்ளிட்ட சேவைகளை முடக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மீறியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஆதாரங்கள் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு அமர்வு தெரிவித்தது.
மேலும், இது குறித்து விளக்கமளித்து அக்டோபர் 13-ந்தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரம் மற்றும் இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.