தேசிய செய்திகள்

சர்க்கரை விலை உயர்வுக்கும் எத்தனாலுக்கும் தொடர்பு இல்லை; மத்திய அரசு விளக்கம்

சர்க்கரை விலை உயர்வுக்கு ஆலை உரிமையாளர்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் சர்க்கரை விலை அதிகரித்து உள்ளது. எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரையை அரசு திருப்பி விடுவதே இதற்கு காரணம் என செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இதை மத்திய அரசு மறுத்து இருக்கிறது. இது குறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், 'சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதை காரணம் காட்டுவது தவறானது. கரும்பில் ஏற்பட்டுள்ள சிவப்பு அழுகல் மற்றும் நுனி துளைப்பான் நோய் மற்றும் மழை வெள்ளம் காரணமாக சர்க்கரை உற்பத்தி சரிந்திருக்கிறது' என தெரிவித்தார்.

சர்க்கரை விலை உயர்வு

மேலும் அவர், 'அக்டோபர் 31-ந் தேதிக்குள் 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்து, மொத்த நுகர்வோர் மற்றும் டீலர்களுக்கு கையிருப்பு வரம்புகளை விதித்து, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்றும் கூறினார். அரசின் இந்த நடவடிக்கையால் வரும் நாட்களில் சில்லறை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர். இந்த விலை உயர்வுக்கு ஆலை உரிமையாளர்களே காரணம் என தெரிவித்தார். வெறும் 7 நாட்களில் ஆலை உரிமையாளர்கள் சர்க்கரை விலையை கிலோவுக்கு ரூ.47-48-லிருந்து ரூ.62 ஆக உயர்த்தியுள்ளதாகவும், இது முற்றிலும் நியாயமற்றது என்றும் கூறினார்.