தேசிய செய்திகள்

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ஓய்வு பெறும் எம்.பிக்களை பாராட்டி பேசிய பிரதமர் மோடி

அரசியல் பயணம் என்பது என்றும் தொடரக்கூடியது என்று பிரதமர் மோடி கூறினார்.

மாநிலங்களவையில் இன்றுடன் 37 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தமிழகத்தின் ஜி.கே. வாசன், கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, செல்வராசு, தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் பதவிக்காலமும் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் திருச்சி சிவா, தம்பிதுரை ஆகியோர் மீண்டும் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்றுடன் ஓய்வு பெற உள்ள எம்.பிக்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார்.பிரதமர் மோடி பேசியதாவது:“தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறும் எம்.பிக்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.ஓய்வு பெறும் எம்.பிக்களின் அனுபவம் பொது வாழ்க்கைக்கு தொடர்ந்து வழிகாட்டும். அரசியல் பயணம் என்பது என்றும் தொடரக்கூடியது; அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை நாடாளுமன்ற சேவைக்காக அர்ப்பணித்துள்ளனர். புதிய எம்.பிக்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்குமாறும், அனுபவம் வாய்ந்த எம்.பிக்களிடம் உத்வேகம் பெறுமாறும் புதிய எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துவதற்கு அவர்களின் வழிகாட்டுதல் இன்றியமையாதது” என்றார்.