மும்பை,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று மும்பை பிரஸ் கிளப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டார். அப்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது ராஜ் தாக்கரே கூறியதாவது:-
"மத்திய அரசு அடுத்தடுத்து தவறுகளை செய்து வருகிறது. இதனால் இன்னும் 2 முதல் 5 மாதங்களுக்குள் நாட்டில் ஒரு பெரிய அரசியல் எழுச்சியும், ஆட்சி மாற்றமும் ஏற்படும். ஒட்டு மொத்த நாடும் வீதிக்கு வந்து போராடினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வெறும் தேர்வுக்கானது மட்டுமல்ல, மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளின் ஒட்டுமொத்த குமுறலின் வெளிப்பாடு ஆகும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக நான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கூறி வருகிறேன். அப்போது எந்த அரசியல் கட்சியும் இதன் தீவிரத்தை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இப்போது அனைவரும் உணர்ந்துள்ளனர். எனவே, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும். நம் நாட்டில் கொலை செய்தவனுக்கே ஜாமீன் கிடைத்துவிடும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.