தேசிய செய்திகள்

3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து... மாநில பாடலின் முன்னுரிமையை பறிக்கும் முயற்சி: கனிமொழி எம்.பி. ஆவேசம்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாநில பாடலே முதலில் பாடப்பட்டு வருகிறது.

புதுடெல்லி

முதல் இடத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து, இன்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது, மாநில பாடலின் முன்னுரிமையை பறிக்கும் முயற்சி என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., அரசு நிகழ்ச்சிகளில் இரண்டாவது பாடலாக தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்படாவிட்டால், அதனை குற்றவியல் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியுள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் மாநில பாடல்கள் உள்ளன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாநில பாடலே முதலில் பாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்று, பல மாநிலங்களின் மாநில பாடல்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இது எங்கள் மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. மாநில பாடலின் முன்னுரிமையை பறிக்கும் முயற்சியை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

இரண்டு சரணங்கள்

மேலும், இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய முன்னோடிகளும், நாட்டின் தலைசிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும், வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று தெளிவாக கூறியிருந்தனர். ஏனெனில், மீதமுள்ள சரணங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடும்; அதனால் அனைத்து ஆறு சரணங்களையும் பாடுவதில் வேறு மாநிலத்தவருக்கு தயக்கம் இருக்கலாம் என தெளிவுபடுத்தி இருந்தார்.

தற்போது மத்திய அரசு ஆறு சரணங்களையும் கட்டாயமாக பாட வேண்டும் என்றும், அவ்வாறு பாடவில்லை என்றால் அது குற்றவியல் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் சட்டம் கொண்டு வருவது, நாட்டின் நலனுக்கு எதிரானது. இது நாட்டை மேலும் பிளவுபடுத்தும் ஒரு முயற்சி என்றார்.