திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கார்த்திகை தீபத்திருவிழா நெருங்குவதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகி யோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு கூறினர். அந்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கூறி உள்ளனர். இதன்மூலம் தனி நீதிபதியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் காவல்துறை, தொல்லியல் துறை நிபந்தனையை எதிர்த்து ராம ரவிக்குமாரின் மனு, திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்கவும் தீபத்தூணில் அணையா விளக்கை ஏற்றவும் கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த ரிட் மனு, மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டது.
அதுமட்டுமின்றி தீபத்தூணில் பக்தர்கள் அமைதியான முறையில் பாரம்பரிய தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிப்பதை உறுதி செய்யவும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான மத்திய ரிசர்வ் காவல் படையை உடனடியாக பணியமர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி இந்து தர்ம பரிஷத் மற்றொரு மனுதாக்கல் செய்தது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் 'கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. குன் றின் உச்சியிலோ அல்லது தற்போது மனுதாரராலும் பிறராலும் 'தீபத்தூண்' என்று விவரிக்கப் படும் கல்தூணிலோ கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்த எந்தவொரு நிலைபெற்ற நடைமு றையோ, பழக்கவழக்கமோ அல்லது முந்தைய உரிமைக்கோரிக்கையோ எக்காலத்திலும் இருந்ததில்லை.
150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்திற்கிணங்க கோவிலுக்கு மேலே அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கோவில் நிர்வாகத்தால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதுவே எக்காலத்திலும் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நிலையான நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. இந்த நடைமுறையை மாற்றினால் பிரச்சினை ஏற்படக்கூடும். கார்த்திகை தீபத்திருவிழா நெருங்குவதால் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால் சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று வாதிட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைபெறுகிறது.