தேசிய செய்திகள்

அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம்; பந்தளத்தில் இருந்து நாளை புறப்பாடு

அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்ததை தொடர்ந்து, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த மாதம் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதுவரை 15.75 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர். நடப்பு சீசனில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 44 ஆயிரத்து 13 பேர் தரிசனம் செய்து உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது சாமி அய்யப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு சபரிமலை நோக்கி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

இந்த ஊர்வலம் சாமி அய் யப்பனின் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக பம்பையை சென்றடையும். பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் 14-ந் தேதி மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, அய்யப்பனுக்கு அணி விக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு நடைபெறும் அலங்கார தீபாராதனைக்குப்பின் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.