நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் குளறுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் எனக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்தது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி, கட்சியாக உருவெடுத்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் போராட்டம் என்பதால் நாடு முழுவதும் கவனம் பெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கே பேசியதாவது;
தோழர்களே, இது மிக நீண்ட போராட்டம் ஆகும். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சமூக வலைதள மூலம் நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு செவி கொடுக்காதவர்கள், நமது பதிவுகளை நீக்குவது, கணக்குகளை முடக்குவது, ஹேக் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.நீங்கள் எங்களது பதிவுகளை நீக்க முடியும். ஆனால் இந்த போராட்ட குரலையும், எங்களது இருப்பையும் அழிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசிய லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பேசியதாவது: கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பம் மட்டுமே. எங்களின் முதன்மையான இலக்கு, ஒட்டுமொத்த கல்வி அமைப்பிலும் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாகும். தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் என்பது மிகப் பெரிய பிரச்சினையின் அறிகுறிகள் மட்டுமே. வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, கல்வி அமைப்பு முழுவதும் விரிவான சீர்திருத்தங்கள் அவசியம்” என்று வலியுறுத்தினார்.