தேசிய செய்திகள்

தீபாவளியில் அதிகமான ஆர்டர் செய்யப்பட்ட சுவீட் இதுதான்.. ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட தகவல்

கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு 10.7% ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை (8-ம் தேதி)உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி வார இறுதியில், மொறுமொறுப்பான மசாலா தோசை, பனீர் பட்டர் மசாலா மற்றும் காஜு கட்லி ஆகியவை நாடு முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளாக முன்னிலை வகிக்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு என பிரத்யேக உணவுப் பழக்கங்கள் இருந்தாலும், இந்த மூன்று உணவுகளும் பொதுவான தேர்வாக இருந்ததை ஸ்விக்கியின் தரவுகள் காட்டுகின்றன.

இனிப்பு வகைகளில், காஜு கட்லி முதலிடத்தைப் பிடித்து, பண்டிகைக் காலத்தின் மறுக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து மோதிச்சூர் லட்டு, ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமூன் ஆகிய இனிப்புகளும் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்த பண்டிகைக் காலத்தில் உணவு டெலிவரி ஆர்டர்களும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உணவு டெலிவரி ஆர்டர்கள் 10.7% அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8 வரையிலான மூன்று நாள் பண்டிகைக் காலத்தில், இந்நிறுவனம் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 97,545 உணவு ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளது.

SCROLL FOR NEXT