புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘மாணவர்களின் எதிரொலி’ என்ற பெயரில் கடந்த ஜூன் 17-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பேரணி நடத்தினார். அதில் பேசிய அவர் இந்தியாவின் கல்வி அமைப்பு பணம் பறிக்கும் அமைப்பாக மாறிவிட்டது என்று குற்றம்சாட்டினார். மேலும், வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் மீதான அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து 2-வது ‘மாணவர்களின் எதிரொலி’ பேரணி வரும் 17-ந்தேதி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ஊழல், அநீதி, பாரபட்சம், நேர்மையின்மை - இந்த நான்கு சொற்களும் என்னுடையவை அல்ல; இந்தியாவின் கல்வி முறையை விவரிக்க இன்று மாணவர்கள் பயன்படுத்தும் சொற்கள் இவை. உண்மை என்னவென்றால், இந்தியாவின் கல்வி முறை இன்று ஒரு நேர்மையற்ற, பணம் பறிக்கும் அமைப்பாக மாறிவிட்டது.
குழந்தைகளை அவர்களின் எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டிய இந்த அமைப்பு, இன்று அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கடன், மன அழுத்தம் மற்றும் விரக்தியை நோக்கி தள்ளுகிறது. இந்த ஊழல்தான் 'வினாத்தாள் கசிவு’ மாபியாவை உருவாக்கியுள்ளது. இது தேர்வுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பை முழுவதுமாக பறித்துவிடுகிறது.
இங்கே, தவறு செய்த ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் புதிய ஒப்பந்தங்களையும், பதவி உயர்வுகளையும் பெறுகிறார்கள். ஆனால் தண்டனை யாருக்கு? சிதைந்துபோன கனவுகளுடன் தனியாக விடப்படும் மாணவர்களுக்குத்தான். மோடி அரசும், கல்வி மந்திரியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மவுனமாக இருக்கிறார்கள். அவரகள் எதற்கும் பொறுப்பேற்கவில்லை. ஊடகங்களிலோ? நீண்ட மவுனம் மட்டுமே நிலவுகிறது.
இனிமேலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவின் கல்வித்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. ஜூலை 17-ந்தேதி டேராடூனில் என்னுடன் இணையுங்கள். மாணவர்களின் எதிரொலியை (Echo of Students) இன்னும் வலுவாக ஒலிக்க வைப்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.