தேசிய செய்திகள்

நாட்டை சூறையாடும் இந்துக்களே ஆட்சியில் உள்ளனர்: பா.ஜ.க.வை மறைமுகமாக சாடிய உத்தவ் தாக்கரே

கோவிலை கொள்ளையடிப்பவர்களை இந்துக்கள் விடமாட்டார்கள் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) 'ராம் ரக்ஷா' போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது, ​​"இந்துக்களை கொள்ளையடிப்பவர்களே ஆட்சியில் உள்ளனர்" என்று கூறி ஆளும் பா.ஜ.க.வை அவர் கடுமையாக சாடினார்.

மத்திய மும்பையின் தாதர் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு வெளியே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்துத்துவாவை தவறாக பயன்படுத்தி யாரேனும் கோவிலை கொள்ளையடித்தால், இந்துக்கள் அவர்களைச் சும்மா விடமாட்டார்கள்.

இந்துக்களை கொள்ளையடிப்பவர்களே ஆட்சியில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கொள்ளையனிடமே அவன் செய்த கொள்ளை குறித்து விசாரிக்க சொல்ல முடியாது. விசாரணை நடுநிலையானதாக இருக்க வேண்டும்.

அயோத்தி ஒரு முன்னோட்டம் (டிரெய்லர்) மட்டுமே. காசி மற்றும் மதுரா ஆகியவை இன்னும் வரவிருக்கின்றன. ஆனால் அங்கு நடக்கப்போகும் திருட்டை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது. நாங்கள் தீவிரமான, அப்பாவியான, தேசப்பற்றுள்ள இந்துக்கள். ஆனால் முட்டாள்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு ஜூன் 7ம் தேதி அன்று வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர், உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) ஆரம்பக்கட்ட அறிக்கையை தொடர்ந்து, ஜூன் 25ம் தேதி அன்று இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் கோவில் நன்கொடை மற்றும் பணம் எண்ணும் பணிகளுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.