தேசிய செய்திகள்

‘அசுர குணம் கொண்டவர்கள் சுந்தரகாண்டத்தை எதிர்க்கிறார்கள்’ - பா.ஜ.க.வின் 'அரசியல் இந்து' விமர்சனத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பா.ஜ.க. ராம நாமத்தை பயன்படுத்துகிறது என்று கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பணம் முறைகேடு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அக்கட்சியின் ‘சுந்தர காண்ட பாதை’ என்ற பெயரில் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து டெல்லி பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறுகையில், “கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ராமரின் நியாபகம் வந்துவிட்டது. ‘அவர் ஒரு அரசியல் இந்து’. தேர்தல்கள் நெருங்கி வருவதால் அவரது நாடகம் தற்போது தொடங்கியுள்ளது. கடவுள் ராமர் எப்போதும் உண்மையின் அடையாளமாக திகழ்கிறார். டெல்லி மக்களும், நாட்டு மக்களும் கெஜ்ரிவாலின் நாடகம் குறித்து நன்கறிந்துள்ளனர்” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவரின் இந்த விமர்சனத்திற்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமபிரானுக்கு பா.ஜ.க. துரோகம் செய்துள்ளது. தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பா.ஜ.க. ராம நாமத்தை பயன்படுத்துகிறது. ராமர் கோவில் நன்கொடை முறைகேட்டிற்கு பின்னாள் இருக்கும் திருடர்களும், கொள்ளையர்களும் பிடிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட வேண்டும்” என்று கூறினார்.

மேலும் தனது ‘எக்ஸ்’ தளத்தில் இது குறித்து பதிவிட்ட கெஜ்ரிவால், “கலியுகத்தில் அசுர குணம் கொண்டவர்கள் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வதை எதிர்ப்பார்கள் என்று ராம பிரான் கூறியுள்ளார். அசுர குணம் கொண்டவர்கள் சுந்தரகாண்டத்தை எதிர்க்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.