image credits: AI 
தேசிய செய்திகள்

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ-யால் அச்சுறுத்தல்: வங்கிகளுக்கு எச்சரிக்கை

ஆன்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கியுள்ள ஏஐ மாடலான ‘மித்தோஸ்’ வங்கி துறைகளுக்கு ஆபத்தாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. முன்னணி டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஏஐ மாடல்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. அதேவேளையில் தகவல் தொழில்நுட்ப துறையில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளன. அந்த வகையில், தற்போது ஆன்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கியுள்ள ஏஐ மாடலான ‘மித்தோஸ்’ வங்கி துறைகளுக்கு ஆபத்தாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கணினி பாதுகாப்புத் துறையில் மிகத் திறனுடன் செயல்படும் இந்த ‘மித்தோஸ்’ ஏஐ மாடல், சைபர் குறைபாடுகளைக் கண்டறிந்து, தாக்குதல்களை சுயமாக மேற்கொள்ளும் அபாயம் கொண்டிருப்பதால், பாதுகாப்புக் கருதி பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிடப் போவதில்லை என ஆன்த்ரோபிக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும், சமீபத்தில் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதையடுத்து, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், கணினி பாதுகாப்பு வல்லுநர்களுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், “தொழில்நுட்பச் சவாலை எதிர்கொள்ள வங்கிகள் மிகுந்த விழிப்புணர்வுடனும் தயார் நிலையுடனும் இருக்க வேண்டும். சைபர் பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த நிபுணர்களைப் பணியமர்த்தி, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், சந்தேகத்துக்கிடமான பணப் பரிமாற்றங்கள் குறித்து உடனுக்குடன் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவும் வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இந்த ஆலோசனையின் போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் உடன் இருந்தார்.