தேசிய செய்திகள்

சி.பி.ஐ. என்று கூறி தொலைபேசியில் மிரட்டல்... ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.44 லட்சம் மோசடி

வழக்கில் கோபாலின் குடும்பத்தினர் பெயரையும் சேர்க்கப் போவதாக அந்த நபர்கள் கூறியதால் கோபால் மிகவும் அச்சமடைந்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சந்திரலோக் காலனியை சேர்ந்தவர் கோபால் பிரசாத். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவருக்கு, கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி, தொலைபேசியில் ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண், தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண், மும்பையில் உள்ள ஒரு வங்கியில் கோபால் பிரசாத் பெயரில் ரூ.3 கோடி அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக கோபால் பிரசாத் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கோபால் கூறியபோதும், அந்த பெண் தொடர்ந்து கோபாலை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

பின்னர் காவல்துறை அதிகாரி போல் மற்றொரு நபர் கோபாலிடம் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமாகவும் கோபாலை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அதோடு, இந்த பணமோசடி விவகாரத்தில் கோபாலின் குடும்பத்தினர் பெயரையும் சேர்க்கப் போவதாக அந்த நபர்கள் கூறியதால் கோபால் மிகவும் அச்சமடைந்துள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்த கோபாலிடம் அந்த நபர்கள், “இந்த வழக்கில் இருந்து பிரச்சினை இல்லாமல் உங்களை தப்பிக்க வைக்கிறோம். உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கொடுங்கள்” என்று கேட்டுள்ளனர். அதோடு, வழக்கின் செலவுகளை கவனிக்க பணமும் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட விவரங்கள் அனைத்தையும் கொடுத்த கோபால், அவர்கள் கேட்டுக் கொண்டபடி பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பியுள்ளார்.

இதன்படி கோபால் சுமார் 22 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த பின்னர் பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அந்த நபர்கள் வாக்குறுதியும் கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டவர்கள், அதன் பிறகு கோபாலை தொடர்பு கொள்ளவில்லை. சுமார் 4 மாதங்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி பணம் திரும்ப கிடைக்காததால் சந்தேகமடைந்த கோபால், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். அப்போதுதான் இது ஒரு மோசடி என்பது கோபாலுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.