பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூதரகுபேட்டை பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி அந்த பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 250 கிலோ பாதாம் பருப்பு, 10 கிலோ பிஸ்தா பருப்பு, 10 கிலோ முந்திரி பருப்பு, 10 கிலோ பெரிய பாதாம் பருப்பு, ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
இதேபோல் மைசூரு டவுன் பழைய சந்தேபேட்டே பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியிலும் திருடுபோய் இருந்தது. இதுபற்றி வி.வி.புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் காரில் சென்று இந்த பல்பொருள் அங்காடியில் பாதாம் பருப்பு உள்ளிட்டவற்றையும், பணத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து 90 கிலோ ஏலக்காய், 228 கிலோ பாதாம் பருப்பு, 25 கிலோ முந்திரி பருப்பு, ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 11 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.