புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1-ந்தேதி முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயம் என்றும், மூன்றாவது மொழிக்கு 10-ம் வகுப்பில் பொது தேர்வு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மும்மொழி கொள்கையின்படி மூன்றாவது மொழி பாடத்திற்கு மதிப்பெண் இல்லை என்று கூறப்பட்டாலும், 10-ம் வகுப்பு இறுதி வகுப்பு தேர்வின்போது மொழிப்பாடத்தில் மாணவர்களுடைய தேர்ச்சி என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்று மொழிகள் படிப்பத கட்டாயமாக்கக்கூடிய இந்த புதிய விதிமுறைக்கு இடைக்கால தடையை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.