கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் நேற்று திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டம் வட்டவட பகுதியில் தேயிலை தோட்டப்பகுதியில் நேற்று மதியம் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த வீடு இடிந்தது. வீட்டின் இடிபாடுகளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி கொட்டகம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது51), அவரது சகோதரி சின்னு (45) ஆகியோர் இறந்தனர். மேலும் மாரியம்மா என் பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை மீட்டு, துணியால் தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். மேலும் காயமடைந்த மாரியம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதேபோல கோட்டயம் அருகே டீக்காய் வேலத்துச்சேரியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுற்றுலாத்தலமான வாசகமணு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் மண் சரிந்து விழுந்ததில் சிக்கினர். இதில் ஒரு பெண் பலியானார்.ன் அவர் சென்னை ஜவகர் நகரைச் சேர்ந்த சங்கீதா அருள் லால் (35) என்று தெரியவந்தது. அவருடன் வந்த தமிழகத்தைச் சேர்ந்த தோழி காய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் கேரளத்தில் வருகிற 24-ந் தேதி வரை கனமழை தொடரும் என மத்திய வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கள்ளக்கடல் நிகழ்வின் ஒரு பகுதியாக 21-ந் தேதி கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக் கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களின் கடற்கரைகளில் 1.5 மீட்டர் உயரம் வரை அலைகள் காணப்படும். அத்துடன் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.