தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் முன்பதிவு - கேரள போக்குவரத்து துறையின் புதிய திட்டம் நாளை தொடக்கம்

பயண சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கைகளை கேரள மாநில போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள அரசின் மாநில போக்குவரத்துக் கழகம்(KSRTC), செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பம் சார்ந்த வாட்ஸ்அப்(WhatsApp) டிக்கெட் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பயணிகள் வாட்ஸ்அப் வழியாக விரைவாகவும், எளிதாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரள மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் பயண சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.ஐ. தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியை, போக்குவரத்துத் துறை மந்திரி சி.பி. ஜான் ஆகஸ்ட் 6-ந்தேதி(நாளை) தொடங்கி வைக்க உள்ளார். மேலும், கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை(எண்: 149) மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூரியர் சேவையையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.