கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மராட்டியம்: பீடி இலை பறிக்க சென்றபோது புலி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

மராட்டியத்தில் வனப்பகுதியில் பீடி இலைகளை பறிக்க சென்றபோது புலி தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

சந்திராபூர்,

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம், இந்தியாவில் அதிக புலிகள் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இங்குள்ள வனப்பகுதிகளில் மனிதர்களை புலிகள் தாக்கிவரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சியின்போது ஊருக்குள் வரும் புலிகளால் அந்த பகுதி கிராம மக்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரபூர் பகுதியை சேர்ந்த 13 பெண்கள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை சுற்ற பயன்படுத்தப்படும் 'தெண்டு' இலைகளை சேகரிப்பதற்கு இன்று காலை வனப்பகுதிக்கு சென்றனர். குஞ்சேவாஹி கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் பெண்கள் அனைவரும் தெண்டு இலைகளை சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி திடீரென பெண்களை தாக்கியது.

இதில் நிலைகுலைந்த பெண்கள் அனைவரும் பயத்தில் அலறியபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை விரட்டி விரட்டி புலி தாக்கியது. இதில் குஞ்சேவாஹியை சேர்ந்த கவுடுபாய் தாதாஜி மொஹர்லே (45 வயது), அனுபாய் தாதாஜி மொஹர்லே (46 வயது), சுனிதா கவுசிக் மொஹர்லே (33 வயது), சங்கீதா சந்தோஷ் சவுதிரி (36 வயது) ஆகியோர் உயிரிழந்தனர்.

கோடை மாதங்களில் மட்டுமே இந்த பகுதி மக்கள் வனப்பகுதிகளுக்கு சென்று பீடி இலைகளை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த வறட்சியான சூழலில் பீடி இலைகளை சேகரிக்கும்போது புலிகள் தாக்கும் சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

எனவே புலிகளின் வாழ்விடங்களையொட்டி கிராமங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும், வனத்திற்குள் நுழைவது குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்க வேண்டும், இழப்பீட்டை விரைவாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.