மும்பை,
மராட்டிய மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் தோல் மற்றும் விஷம் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாகக் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 6 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மராட்டியத்தில் மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் தோல் மற்றும் விஷம் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்யும் கும்பல் செயல்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், கடந்த நவம்பர் 25-ம் தேதி புனே அருகே பாம்பு விஷம் விற்க முயன்ற 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 பாட்டில்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 2 லிட்டர் ராஜநாக பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது எதிர்பாராத விதமாக விஷம் சிந்தியதில் அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, நவம்பர் 26-ம் தேதி பன்வெல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் புலி மற்றும் சிறுத்தையின் தோல்கள் சிக்கின. மேலும், நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்திய சோதனையில் சிவிங்கிப்புலியின் தோல் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஏர் ரைபிள் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் சிறுத்தையின் தோலில் துப்பாக்கி குண்டு துளைத்த காயம் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினங்களை வேட்டையாடியதுடன், அவற்றின் உறுப்புகளை கடத்த முயன்ற 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் அவர்களை மராட்டிய வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனவிலங்கு வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.