ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று அதிகாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதற்காக, திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர் வரிசை பொருட்களை சமர்ப்பிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் க.எஸ்.ஜவஹர் ரெட்டி, அவரின் மனைவி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, அவரின் மனைவி ஆகியோர் நேற்று மாலை கார்களில் திருமலையில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்தனர்.
அவர்களும், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன் ரெட்டியும் வெள்ளித்தட்டுகளில் மஞ்சள், குங்குமம், லட்டு பிரசாதம், பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களை வைத்து, அதை தலையில் சுமந்தபடி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் பிரதான கிழக்குக் கோபுரம் வழியாக மேள தாளம், மங்கள வாத்தியங்களுடன் வேதமந்திரங்கள் முழங்க கோவிலின் அலங்கார மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு வந்து, கோவிலின் பிரதான அர்ச்சகர் சம்பந்தம் குருக்களிடம் வழங்கினர்.
அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் டாலர் சேஷாத்திரி மற்றும் சிவன் கோவில் அதிகாரி பெத்திராஜு, வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.