தேசிய செய்திகள்

திருப்பதி கோவில்: ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி உண்டியல் காணிக்கை..!

திருப்பதியில் நேற்று மட்டும் ரூ.4.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த மாதத்தில் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலாகியுள்ளது.

இலவச தரிசன டோக்கன் ரத்து

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கடந்த மாதம் 10 நாட்கள் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. இதனால் தொலைதூரங்களில் இருந்து வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனால் வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இலவச டோக்கன் விநியோகம் ரத்து

நேற்று திருப்பதியில் அதிகளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்ததால், ஸ்ரீனிவாசம், ஸ்ரீதேவி-பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டது.

தரிசன டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பதி மலைக்கு சென்றனர். நாளை மறுநாள் தரிசனத்துக்கான நேர ஒதுக்கீட்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் வழக்கம்போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் நேற்று 78,310 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூலானது.

மேலும், 4.14 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT