திருப்பதி,
திருமலை சேஷாசலம் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஏழுமலையான் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 'ரோபோ நாய்' பயன்படுத்தப்பட உள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தான. இதற்கான அதிநவீன சோதனை ஓட்டம் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
திருப்பதி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது பக்தர்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு கால்கள் கொண்ட ரோபோ நாயை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது.
இந்த ரோபோவின் செயல்விளக்க ஆய்வை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் திருமலை திருப்பதி தேவஸ்தான. மலப்பாதைகள், பாறைகள் நிறைந்த கரடுமுரடான பகுதிகளில் இந்த ரோபோ நாய் எவ்வாறு இயங்குகிறது என்பது சோதிக்கப்பட்டது.
இருள் மற்றும் பனிமூட்டத்திலும் விலங்குகளை துல்லியமாக காட்டும் தெர்மல் மற்றும் ஆப்டிகல் கேமராக்கள் இதில் உள்ளன. காட்டில் விலங்குகள் நடமாட்டம் இருந்தால், உடனே கட்டுப்பாட்டு அறைக்கு நேரலை வீடியோ மற்றும் இருப்பிட தகவலை அனுப்பும். பக்தர்களை நோக்கி விலங்குகள் வருவதை தடுக்க, சத்தம் மற்றும் ஒளியை எழுப்பி அவற்றை காட்டுக்குள் விரட்டும் வசதியும் இதில் உண்டு.
இந்த ரோபோ நாய் தற்போது 20 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால், அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவின் போது வனப்பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்புக்காக இது முழுமையாக பயன்படுத்தப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.