தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜிக்கு தொடர்ந்து பின்னடைவு: மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகியதால், மம்தா பானர்ஜிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கட்சிக்குள் கலகம்

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அத்துடன் அந்த கட்சிக்குள் பெரும் கலகம் வெடித்து வருகிறது.

கட்சியின் 80 எம்.எல்.ஏ. க்களில் 58 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மறுபுறம் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் சுமார் 20 பேர் தனியாக பிரிந்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதில் மேலும் ஒரு அதிர்ச்சியாக கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுகேந்து சேகர் ராய் கடந்த 8-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகினார்.

அசாம் முதல்-மந்திரியுடன் சந்திப்பு

இவ்வாறு திரிணாமுல் காங்கிரசில் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்து வரும் நிலையில் மேலும் ஒரு மாநிலங்களவை எம்.பி.யான சுஷ்மிதா தேவ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் அசாம் பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதன் மூலம் அவர் பா.ஜனதாவில் இணைவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரகாஷ் சிக் பராக்

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகி உள்ளார். இதன்படி பிரகாஷ் சிக் பராக் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அளித்த கடிதத்தில், “ நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இதன்மூலம் ராஜினாமா செய்கிறேன். இதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். துணைத் தலைவர் அவர்களே, மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக நான் பதவி வகித்த காலத்தில் எனக்கு அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய மாநிலங்களவை செயலகத்தின் அனைத்து அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகியதால், மம்தா பானர்ஜிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.