தேசிய செய்திகள்

பணம் பறிக்க நீதிபதிக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுக்க மனைவியை கட்டாயப்படுத்தியவர் கைது

குர்கானில் பணம் பறிக்க நீதிபதிக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுக்க மனைவியை கட்டாயப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியை அடுத்த குர்கானில் மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுக்க அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையை நாடியுள்ளார். கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சியம் அளிக்க ஜூன் 29-ம் தேதி சென்றபோது நீதிபதி பாலியல் தொல்லை கொடுத்தார் என செவ்வாய் கிழமை கொடுத்த புகாரில் பெண் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்ட போது பெண்ணின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என தெரியவந்துள்ளது. நீதிபதியிடம் பணம் பறிக்க அவருடைய கணவர் ஹாசர்கான் (வயது 44) போட்ட திட்டம் என்பது தெரியவந்துள்ளது.

பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அப்பெண் உண்மையை காவல்துறையிடம் கூறியுள்ளார். நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்க என்னுடைய கணவர்தான் வலியுறுத்தினார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் திருமண வாழ்க்கையில் தனக்கு நடந்த கொடுமையையும் காவல்துறையிடம் பதிவு செய்துள்ளார். அரியானாவில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய போது ஹாசர்கானை சந்தித்தேன். பின்னர் 2017-ல் திருமணம் செய்துக்கொண்டேன். திருமணத்திற்கு பின்னர் என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார், என்னுடைய மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினார். இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். 2018-ம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்ய ஹாசர்கான் கட்டாயப்படுத்தினார் என அப்பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஹாசர்கானை கைது செய்துள்ளது.

SCROLL FOR NEXT