தேசிய செய்திகள்

செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறிய மத்திய மந்திரி!

டிஜிட்டல் இந்தியா கனவு திட்டத்தின் உண்மை நிலவரத்தை அறியும் சம்பவமாக செல்போன் சிக்னலுக்காக மத்திய மந்திரி ராம் மேக்வால் மரத்தில் ஏறிஉள்ளார்.

பிகானர்,

ராஜஸ்தான் மாநில பிகானர் தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் அர்ஜூன் ராம் மேக்வால். மத்திய இணை நிதி அமைச்சராக பணியாற்றி வருகிறார். நேற்று தன்னுடைய சொந்த தொகுதியில் உள்ள தோலியா கிராமத்திற்கு மீடியாக்களுடன் சென்று உள்ளார். கிராம மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார். கிராம மக்களின் பிரச்சனைகளை கேட்ட போது, உள்ளூர் மருத்துவமனைகளில் போதிய செவிலியர்கள் கிடையாது என்பது உள்பட பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் தெரிவித்து உள்ளனர். அதுகுறித்தான தகவல்களை அறிய சுகாதார துறை அதிகாரிக்கு அழைப்பு விடுத்து உள்ளார், அப்போது சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் அங்கும், இங்குமாக நடந்து உள்ளார்.

அப்போது கிராம மக்கள் உங்களுக்கு சிக்னல் கிடைப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது, இதற்கு எந்தஒரு வழியும் கிடையாது. முயற்சியின் ஒரு பகுதியாக மரத்தில் ஏறிவிடுங்கள் உங்களுக்கு சிக்னல் கிடைக்கும் என கூறிஉள்ளனர். இதனை கேட்டு மந்திரி ராம் மேக்வால் நகைத்து உள்ளார். தன்னுடைய ஆடையை காரணம் காட்டி என்னால் மரத்தில் ஏற முடியாது என கூறிஉள்ளார். இதனையடுத்து ஊர் மக்கள் ஒரு ஏணியை எடுத்துவந்து அவர் மரத்தில் ஏறுவதற்கு உதவி செய்து உள்ளனர். இதனையடுத்து அவருக்கு செல்போன் சிக்னல் கிடைத்து உள்ளது.

ஏணியில் அவர் அமர்ந்துக்கொண்டு பேசும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராம் மேக்வால் ஏணியில் இருந்த வண்ணம் போனில் பேசிவிட்டு கிழே இறங்கியதும் ஊர் மக்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடினர். இதனையடுத்து கிராம பகுதியில் மூன்று மாதங்களில் ரூ. 13 லட்சம் மதிப்பில் செல்போன் டவர் அமைக்க உத்தரவிட்டு உள்ளார் ராம் மேக்வால்.