மூணாறு,
சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக இடுக்கி அணை வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக கேரள மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு இடையே பிரம்மாண்டமான இடுக்கி அணை அமைந்துள்ளது. ஆசியாவிலேயே 2-வது பெரிய அணையாக கருதப்படும் இது, 2 மலைகளை இணைக்கும் வகையில் வளைவு வடிவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையின் நீர் மூலம் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் மொத்த மின்சார தேவையில் சுமார் 40 சதவீதம் இந்த அணையின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு காரணங்களுக்காக எப்போதும் மூடப்பட்டிருக்கும் இந்த அணை, ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட முக்கியப் பண்டிகை காலங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காகத் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்குமாறு கேரள மின்சாரத்துறை மந்திரி சன்னி ஜோசப் உத்தரவிட்டுள்ளார்.
அணையை சுற்றி பார்க்க வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், பாதுகாப்பு கருதி அணையின் உள்ளே செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணையை பார்வையிட விரும்பும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இடுக்கி அணை திறக்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.