உடைந்த கண்ணாடித் தொட்டி 
தேசிய செய்திகள்

கடல் கன்னி கண்காட்சியில் விபரீதம்: கண்ணாடி தொட்டி வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் காயம்

விதிமீறலில் ஈடுபட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா கண்காட்சியில், கடல் கன்னி சாகச நிகழ்ச்சியின் போது கண்ணாடித் தொட்டி திடீரென வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

'கடல் கன்னி' சாகச நிகழ்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் பக்கர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கலேபூர் கிராமத்தில் 'தாதா மியான் உர்ஸ்' திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு தற்காலிக பொருட்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 'ஜல்பரி' எனப்படும் கடல் கன்னி உடையில் பெண் ஒருவர் தண்ணீருக்குள் சாகசம் செய்யும் நிகழ்ச்சி பொதுமக்களிடையே, குறிப்பாக குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

திடீரென வெடித்த கண்ணாடித் தொட்டி

கடந்த (திங்கட்கிழமை) இரவு சுமார் 9 மணியளவில், இந்த வினோத நிகழ்ச்சியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். குழந்தைகள் பலரும் தொட்டிக்கு மிக அருகில் முன்பக்க வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அதிகப்படியான நீர் அழுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த அந்த பெரிய கண்ணாடித் தொட்டி பயங்கர சத்தத்துடன் திடீரென உடைந்து சிதறியது.

15 பேர் படுகாயம்

தொட்டி உடைந்த வேகத்தில், அதிலிருந்த தண்ணீர் ஒட்டுமொத்தமாக வெளியேறியதுடன் கூர்மையான கண்ணாடித் துண்டுகள் சுற்றிலும் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக பாய்ந்தன. இதில் முன்பக்க வரிசையில் அமர்ந்திருந்த அர்ஷ் (8 வயது), புராவ் (7 வயது), அஹத் கான் (8 வயது), முகமது சாதிக் (9 வயது) ஆகிய 4 குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

குழந்தைகள் அலறல் சத்தம்

இதில் குழந்தைகளுக்கு முகம், தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்ததால் கண்காட்சி திடல் முழுவதும் பெரும் பதற்றமும் கூச்சலும் நிலவியது. காயமடைந்த 15 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

4 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பக்கர்பூர் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமலும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமலும் இந்த ஆபத்தான சாகச நிகழ்ச்சியை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT