தேசிய செய்திகள்

தேர்வு எழுதி வீடு திரும்பிய மாணவருக்கு நேர்ந்த சோகம்: மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து உயிரிழப்பு

மாஞ்சா நூல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெலகாவி,

பெலகாவி அருகே மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் கல்லூரி மாணவர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

மாஞ்சா நூல்

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகரை சேர்ந்தவர் துருவ சந்தோஷ் கார்ஜனகி (வயது 17). இவர், ஐ.டி.ஐ. கல்லூரியில் முதலாம் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த தேர்வை எழுத மோட்டார் சைக்கிளில் துருவ சந்தோஷ் சென்றிருந்தார். தேர்வு எழுதி விட்டு மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.

பெங்களுரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் துருவ சந்தோஷ் வந்து கொண்டிருந்தார். அப்போது மாஞ்சா நூல் துருவ சந்தோசின் கழுத்தில் சிக்கியது. இதனால் துருவ சந்தோஷ் தவறி கீழே விழுந்தார். மாஞ்சா நூல் அவரது கழுத்தில் ஆழமாக அறுத்ததால், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துருவ சந்தோஷ் பரிதாபமாக இறந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார்

தகவல் அறிந்ததும் பெலகாவி டவுன் வடக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து துருவ சந்தோஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பட்டம் விடுவதற்காக தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை யாரோ பயன்படுத்தி விட்டு சென்றதும், அந்த மாஞ்சா நூல் தான் துருவ சந்தோசின் கழுத்தை அறுத்ததும் தெரியவந்தது. துருவ சந்தோஷ் கல்லூரிக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வேலைக்கும் சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் துருவ சந்தோஷ் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.

கடைகளில் அதிகாரிகள் சோதனை

பெலகாவி வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெலகாவியில் மாஞ்சா நூல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள் என்றும் பெலகாவி மாநகராட்சி கமிஷனர் ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT