தேசிய செய்திகள்

பழுது பார்த்த போது, ஜாக்கி நழுவியதால் சோகம்: பஸ்சுக்கு அடியில் சிக்கி மெக்கானிக் பலி

கோழிக்கோடு-தேவாலா இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் அடுத்த பட்டோலி மார்க்கெட் அருகே மீனத்தேல் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி லதிகா. இவர்களது மகன் கிரி பிரகாஷ் (வயது 23), மெக்கானிக் ஆவார்.இவர் கோழிக்கோடு-தேவாலா இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கோழிக்கோடு அருகே உள்ள சரோவரம் பகுதியில், தனது உதவியாளரான கோழிக்கோட்டைச் சேர்ந்த அஸ்வின் (24) என்பவருடன் சேர்ந்து, பஸ்சை ஜாக்கி வைத்து உயர்த்தி நிறுத்திவிட்டு, அதன் அடியில் படுத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜாக்கி நழுவியது. இதனால் பஸ்சுக்கு அடியில் இருந்த 2 பேர் மீதும் பஸ் விழுந்தது. இதில் கிரி பிரகாஷ், அஸ்வின் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் பஸ்சை உயர்த்தி, அதன் அடியில் சிக்கிய இருவரையும் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கிரி பிரகாஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அஸ்வின் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.