டெல்லி விபத்தில் 12 வயது மாணவி பலி 
தேசிய செய்திகள்

டெல்லியில் சோகம்: ஆட்டோ மீது மோதிய பள்ளி பேருந்து... 12 வயது சிறுமி பலி

மோதிய வேகத்தில் சிறுமி பிரியான்ஷி நிலைதடுமாறி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்தார்.

டெல்லி,

வடமேற்கு டெல்லியில் பள்ளி பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதிய விபத்தில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

டெல்லி முகுந்த்பூரின் ராமா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரியான்ஷி (வயது 12). இந்த சிறுமி, வழக்கம் போல தனது சகோதரி மற்றும் பிற குழந்தைகளுடன் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே வாகனம் சென்றபோது, பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது.

சிறுமி பலி

இந்த மோதிய வேகத்தில் சிறுமி பிரியான்ஷி நிலைதடுமாறி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்தார். அப்போது அதே பஸ்சின் சக்கரம் சிறுமியின் மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை உடனடியாக மீட்டு ஜஹாங்கீர்புரியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்வாய்ப்பாக, ஆட்டோவில் இருந்த மற்ற குழந்தைகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

பஸ் ஓட்டுநர் கைது

தகவல் அறிந்த ஆதர்ஷ் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரான கமல் சிங் (வயது 55) என்பவரைக் கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் அஜய் பிரசாத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான ஆட்டோ- பஸ் ஆகிய இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்துக்கான துல்லியமான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.