சித்திப்பேட்டை,
தெலுங்கானாவில் சொத்து பிரிப்பது தொடர்பான தகராறில், கணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்ற 2-வது மனைவி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டம், நர்மேதா பகுதியில் உள்ள மல்காபேட் தாண்டாவை சேர்ந்தவர் பானோத்து பகவான் (வயது 43). இவர் தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதேபோல், அக்கன்னபேட் மண்டலம், சேவலால் மகாராஜ் தாண்டாவைச் சேர்ந்த மாலோத்து ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் 2-வதாக திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ராஜேஸ்வரிக்கு அவரது முதல் கணவர் மூலம் கிடைத்த வீடு, அவரது மூத்த மகளின் பெயரில் உள்ளது.
பகவான், தனது மனைவியின் முதல் மகளின் பெயரில் உள்ள அந்த சொத்தை, தங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் உட்பட மூன்று பேருக்கும் சமமாக பிரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகவானின் பெற்றோர் வீட்டில் தம்பதியினர் இருந்தனர். அப்போது மீண்டும் சொத்து பங்கீடு தொடர்பாக அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, பொறுமையிழந்து கணவர் பகவானை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கினார்.
மனைவி நடத்திய இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பகவான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பகவானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் கணவனை மனைவியே மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.