பெங்களூரு,
பெங்களூரு பாகலூர் முதன்மை சாலையில் உள்ள அமேசான் அலுவலகத்தின் வெளியே உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
பெங்களூரு பாகலூர் முதன்மை சாலையில் உள்ள அமேசான் அலுவலகத்தின் வெளியே டிரான்ஸ்பார்மர் ஒன்று இருந்தது. இன்று காலை அப்பகுதியில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென அந்த டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் அந்த வழியே சென்ற இருவருக்கு காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக, அருகில் நடந்து சென்ற பள்ளி மாணவி ஒருவர் காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் எலஹங்கா பழைய டவுன் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த முகமது அப்ரோஸை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்பொழுது ஆபத்தான கட்டத்தை தாண்டி பாதுகாப்பாக உள்ளதாக போலீசார் தகவல்.
விபத்து நடந்த போது அந்த வழியே காரில் சென்ற ஒருவரின் 'டேஷ் கேமரா'-வில் இந்த வெடிப்பு காட்சிகள் அப்படியே பதிவாகின. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.