தேசிய செய்திகள்

ரூ.200 கொடுக்காததால் திருநங்கை கழுத்தை அறுத்துக்கொலை: வாலிபர் கைது

வாலிபர் தேவியை வழி மறித்து, கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு உப்பார்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை தேவி. இவர் சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில் உப்பார்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் தேவியை வழி மறித்து, கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அவரிடம் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை. ஆகையால் தேவியிடம் இருந்த ரூ.200-ஐ தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு தேவி பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். ஆகையால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியை எடுத்து, தேவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தேவி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை செய்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் உடனடியாக உப்பார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி பற்றி துப்பு துலக்கினர்.

இந்தநிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தேவியை கொலை செய்தவர், ராமமூர்த்தி நகரை சேர்ந்த கவுதம் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. கவுதமை போலீசார் கைது செய்து, கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.