தேசிய செய்திகள்

தேர்தல் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

தேர்தல்களில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தும் வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க கோரியுள்ளது. ஒரு சாதாரண அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்கிறார்கள். ஆனால் வேட்பாளர்களிடம் கல்விக்கான சான்றாக எவ்விதமான ஆவணங்களையும் சமர்பிக்கக் கோருவதில்லை. அதுமட்டுமின்றி குற்ற வழக்குகள் குறித்தான சான்றுகளையும் பெறுவதில்லை.

வேட்பாளர் குறித்த தகவல்களை பெறுவதற்கு குடிமக்களுக்கு உரிமையுண்டு என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் அதிகாரவர்க்கம் பூர்வாங்க ஆதாரங்களை பெறுவதற்கு கூட முனைவதில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். தங்களது தகுதிச் சான்றுகளை வலுப்படுத்தும் ஆதாரங்களை வேட்பாளர்கள் இணைப்பதில்லை. இதனால் அவர்களது தகவல்கள் உண்மையானதா என்பது தெரிவதில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இவ்வாறு முழுத்தகவல்கள் உறுதிப்படுத்தாமல் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவது பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதன் நோக்கத்தையே சிதைக்கிறது என்றும், பிரமாண பத்திரம் தனது புனிதத்தை இழக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.