தேசிய செய்திகள்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்; மேற்கு வங்காளத்தில் பதற்றம்

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கொல்கத்தா,

கடந்த மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி, பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சோனார்பூர் பகுதியில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி சென்றார். பலியான திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது, தகவல் அறிந்து உள்ளூர் பெண்கள் சிலர், கையில் துடைப்பங்கள் மற்றும் மூங்கில் குச்சிகளுடன் அந்த வீட்டின் முன்பு திரண்டனர்.

"அபிஷேக் பானர்ஜி ஏன் வந்தார்? அவர் வந்த வீட்டுக்காரரும் திருடர் தான். ஒரு திருடர் வீட்டுக்கு இன்னொரு திருடர் வந்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட 'நிர்பயா' வீட்டுக்கு சென்றாரா?" என்று அந்த பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். அப்போது, அடையாளம் தெரியாத சில நபர்கள், அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். கற்கள், ஷூக்கள், முட்டைகள் ஆகியவற்றை அவரை நோக்கி வீசினர். அவரை அடிக்கவும், உதைக்கவும் முயன்றனர். 'திருடன், திருடன்' என்று கூச்சலிட்டனர். அபிஷேக் பானர்ஜியின் சட்டை கிழிந்தநிலையில், அவருக்கு போலீஸ் ஹெல்மெட் அணிவித்து, போலீசார் அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

“இது திட்டமிட்ட தாக்குதல். அவர்கள் என்னை கொல்ல முயன்றனர். அந்த இடத்தில் போலீசாரே இல்லை” என்று அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மாநில பா.ஜனதா தலைவர் சமிக் பட்டாச் சார்யா, "பல ஆண்டுகளாக சித்ரவதை செய்யப்பட்ட உள்ளூர் மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் இச்சம்பவம்" என்று கூறினார். இதற்கிடையே, மத்திய படைகளின் பல்வேறு குழுக்களும், சோனார்பூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மேற்குவங்காள மாநிலம் ஹூக்ளி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விடுவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு அளிக்க இன்று (ஞாயிறு) கல்யாண் பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அப்போது அங்கு பா.ஜ.க.வினரும் வந்துள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கல்யாண் பானர்ஜியின் தலையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் சரிந்து கீழே விழுந்தார்.

கல்யாண் பானர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடிகளுடன் திரண்டு போராட்டக்காரர்கள் முழக்கமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அபிஷேக் பானர்ஜி எம்.பி. தாக்கப்பட்ட நிலையில் இன்று கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.