தேசிய செய்திகள்

பஞ்சாபில் லாரி டிரைவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்தினருக்குத் தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கி வந்த லாரி டிரைவருக்கு தற்போது ரூ.12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் தேரா பஸ்ஸி பகுதியில் உள்ள ஹம்யூன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங் (45). டிப்பர் லாரி டிரைவராகப் பணியாற்றி வரும் இவர், சிறிய அளவில் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பல்ஜிந்தர் சிங் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பண்டிகைக் காலங்களில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். ஆனால், லாட்டரி வாங்குவதை தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாக வைத்து இருந்துள்ளார்.

ரூ.500 லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் மாநில அரசு நடத்திய தீபாவளி பம்பர் 2026' லாட்டரி குலுக்கலில் பல்ஜிந்தர் சிங்குக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.மொஹாலி மாவட்டம் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி விற்பனை நிலையத்தில் ரூ.500 கொடுத்து இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். கடந்த நவம்பர் 16-ம் தேதி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியானபோது அவருக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது.

குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம்

தனக்குக் கிடைத்துள்ள ரூ.12 கோடி பரிசுத் தொகையில் பெரும் பகுதியை தனது இரண்டு குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப் போவதாக பல்ஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார். லாட்டரியில் வெற்றி பெற்ற தகவல் கிராமம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், கிராமத்தில் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்த லாரி டிரைவருக்கு தற்போது ரூ.12 கோடி பரிசு கிடைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT