கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் லாரி வாடகை 15 சதவீதம் உயர்வு.. நாளை முதல் அமல்..!

புதுச்சேரியில் நாளை முதல் லாரி வாடகை 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வாடகை கட்டணம் உயர்வு

புதுச்சேரி மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் முருகசாமி தலைமையில் மேட்டுப்பாளையம் கனரக வாகன மையத்தில் நேற்று மாலை நடந்தது.

அதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் பல ஆண்டுகளாக லாரி வாடகை உயர்த்தப்படவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 5 ஆண்டுகளாக டீசல் விலையையும் உயர்த்தவில்லை. தமிழகத்தைவிட ரூ.10 குறைத்தார். தற்போது எங்களின் வாழ்வாதாரம் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் ஆண்டுக்கு 10 முறை ஏற்றப்பட்டு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இப்போது டீசல் விலை உயர்வால் வாகனங்களின் உதிரி பாகங்கள், டயர் உள்ளிட்டவைகள் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் 25 சதவீதம் வாடகை உயர்வை அறிவித்துள்ளனர். எங்கள் சங்கத்தின் சார்பில் 15 சதவீதம் வாடகைக் கட்டணம் உயர்த்த உள்ளோம். இது நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

டோல்கேட் அகற்ற வேண்டும்

புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் எங்களுடைய வாடகை உயர்வால் பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வு வரத்தான் செய்யும்.

புதுச்சேரியில் 3 திசைகளிலும் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டானூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும். அதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலியமேட்டில் புதிதாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை சரியில்லை. விபத்துகள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது. . அதே போன்று மதகடிப்பட்டு பக்கமும் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.