தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு உரிய அனுமதியுடன் பசுமாடுகள் ஏற்றி வந்த லாரியானது பசு பாதுகாப்பு கும்பலால் கற்கள் வீசி தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் பசுக் காவலர்கள் தலித் மற்றும் இஸ்லாமிய மக்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தச் சம்பவங்களுக்கு அவ்வப்போது கண்டனங்கள் எழுந்தாலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பசு மாடுகள் வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளனர். அவர் ஜெய்சல்மீரிலிருந்து பசுக்களை வாங்கிக்கொண்டு தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.

அப்போது அவர்களை வழி மறித்த 50-க்கும் மேற்பட்ட பசுக் காவலர்கள், அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். மேலும் பசு மற்றும் கன்றுகளை ஏற்றிச் சென்ற லாரிக்கும் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் 4 பேர் மட்டும் ராஜஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறைச்சிக்காக கடத்தப்படுவதாக நினைத்து பசு காப்பாளர்கள் அமைப்பு தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை நடத்த தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.