தேசிய செய்திகள்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரி மீது தாக்குதல்; ஒருவர் கைது

கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில்,சுக்பீர் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதலுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருத்வாராவில் தரிசனம்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரியும், ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல், மராட்டியத்தில் நான்டெட் நகரில் உள்ள குருத்வாரா ஒன்றில் தரிசனம் செய்தார். அப்போது, நபர் ஒருவர் திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இதில், சுக்பிர் சிங் பாதலின் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் சீக்கியர் எனக் கூறப்படுகிறது.

உடல்நிலை சீராக உள்ளது

இந்த தாக்குதல் குறித்து நான்டெட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சுக்பிர் சிங் பாதலிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாக அவர் பட்னாவிஸிடம் கூறியதாகத் தெரிகிறது.

தாக்குதல் நடத்தியவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, சிரோமணி அகாலி தல் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதலுடன் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

சுக்பிர் சிங் பாதல் இதற்கு முன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் தாக்குதலுக்கு உள்ளானார். அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சேவை செய்து கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்த ஒருவர் முயன்றார். அவர் தாக்குவதற்கு முன்பாக மற்றவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரடம் ஒட்டடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய நிலையில், மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.