தேசிய செய்திகள்

கேரளத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

உறுப்பினர் சேர்க்கை செயலியில் மலையாள மொழி இணைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து உள்ளது. த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார்.

இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளம் மாநிலத்தில் தனது அரசியல் எல்லையை விரிவுபடுத்த த.வெ.க. தொடங்கி உள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் த.வெ.க. முதல் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் மலையாள மொழி இணைக்கப்பட்டு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வயநாடு, பாலக்காட்டில் த.வெ.க. கூட்டம் நடந்து உள்ளது. இதில் கட்சியில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்து முன்னெடுத்து செல்ல த.வெ.க. தலைமை திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குபின்னர் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.