தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் அரசு வேலை பெற்று இரட்டை சகோதரிகள் அசத்தல்

கேரளம் மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசு வேலை பெற்று அசத்தியுள்ளனர்.

மலப்புரம்,

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30 வயது), அர்ச்சனா (30 வயது). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. பிறப்பு முதல் இருவரும் சேர்ந்து பயணித்த நிலையில் அரசு தேர்வுக்கும் ஒன்றாக தயாராகி, எழுதி தேர்ச்சியடைந்து தற்போது வேலையையும் பெற்று அசத்தியுள்ளனர்.

அஞ்சனா கல்லூரியில் அறிவியல் பாடம் எடுத்து எம்.எஸ்சி., எம்.எல்.டி. படித்துள்ளார். அர்ச்சனா, பொறியியல் படித்துள்ளார். தொடர்ந்து இருவரும் அரசு வேலையில் சேரும் கனவுடன் கேரளம் பொதுசேவை ஆணைய தேர்வுக்கு (PSC) கஷ்டப்பட்டு படித்து தயாராகி வந்தனர். அதன்படி சமீபத்தில் நடந்த தேர்வை எழுதினர். இதைத் தொடர்ந்து வெளியான தேர்வு முடிவில் அவர்கள் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தனர்.

இந்த நிலையில் அவர்கள் அரசு வேலையில் நியமிக்கப்பட்டு பணி ஆணையை பெற்றுள்ளனர். அதன்படி அஞ்சனா கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா, திரூரில் உள்ள சப்ளை -கோ கிடங்கில் உதவி விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இரட்டை சகோதரிகள் மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.