கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொச்சி: திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது

கேரளா மாநிலம் கொச்சியில் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சியில் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையினர், சேரநல்லூரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்து 14.63 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சேரநல்லூரைச் சேர்ந்த அமல் ஜார்ஜ் (33 வயது) மற்றும் வடக்கேகராவைச் சேர்ந்த அபிஜித் (25 வயது) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், ஏற்கெனவே போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனையை நடத்தி அவர்களை பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சேரநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.