தேசிய செய்திகள்

திருமண விழாவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி - போலீசார் தீவிர விசாரணை

கொலைக்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரா (பீகார்),

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது, ​​இரண்டு பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, மாவட்டத்தின் முபசில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சகியா கிராமத்தில் நிகழ்ந்தது.

துப்பாக்கி சூடு

இது குறித்து ஆரா சதார் எஸ்டிபிஓ-2 (SDPO-2) சுஷில் குமார் கூறுகையில், "திருமண விழாவின் போது ராகுல் குமார், தீபக் குமார் மற்றும் சோனு குமார் ஆகிய மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக முபசில் காவல் நிலையத்திற்கு இரவு 11.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அவர்கள் ஆரா சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் ராகுல் மற்றும் தீபக் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சோனு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்” என்று அவர் தெரிவித்தார்.

முன்விரோதம்

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கௌஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தீமன் யாதவ் மற்றும் ஆஷிஷ் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்பகுதி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று எஸ்.டி.பி.ஓ. தெரிவித்தார்.

மேலும், "முதற்கட்ட விசாரணையின்படி, இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதமே, இந்த துப்பாக்கி சூட்டிற்கான நோக்கமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும்" என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT