கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கின

இரு கப்பல்களும் அருகருகே பயணம் செய்கின்றன.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28-ந் தேதி தாக்குதலை தொடங்கின. தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அந்த வழியாகத்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் இருந்து உலகின் பிற நாடுகளுக்கு கப்பல்கள் செல்கின்றன.

அந்த வழியை முடக்கியதால், கச்சா எண்ணெய்க்கும், சமையல் கியாசுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. போர் தொடங்கியபோது, ஹார்முஸ் நீரிணை பகுதியில் 28 இந்திய கப் பல்கள் நடுவழியில் நின்று கொண்டிருந்தன.

நீரிணைக்கு மேற்கு பகுதியில் 24 கப்பல்களும், கிழக்கில் 4 கப்பல்களும் நின்று கொண்டிருந்தன. இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால், இந்திய கப்பல்கள் ஷிவாலிக், நந்தா தேவி ஆகியவை சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. இதுவரை 92 ஆயிரத்து 712 டன் சமையல் கியாசுடன் அக்கப்பல்கள் குஜராத் துறைமுகங்களுக்கு பத்திர மாக வந்து சேர்ந்தன.

இந்நிலையில், மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கி உள்ளன. சமையல் கியாஸ் ஏற்றப்பட்ட பைன் கியாஸ், ஜேக் வசந்த் ஆகிய 2 கப்பல்களும் நேற்று பாரசீக வளைகுடாவில் இருந்து பயணத்தை தொடங்கின. இரு கப்பல்களும் அருகருகே பயணம் செய்கின்றன.

ஈரானின் லாரக் தீவுக்கும், கேஷம் தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் வந்து கொண்டிருப்பதாக கப்பல் நடமாட்ட கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. அக்கப்பல்கள் தங்களது அடையாளம் ஈரான் அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் செல்கின்றன.