தேசிய செய்திகள்

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய எம்.டி.எஸ் படிப்புகள்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

இந்த கல்வியாண்டு முதல் இந்த 2 முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

புதுச்சேரி,

மகாத்மாகாந்தி முதுநிலை பல் மருத்துவக்கல்லூரியில் 2 புதிய துறைகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

2 புதிய எம்.டி.எஸ் படிப்புகள்

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மாகாந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தின் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மாகாந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்கு இந்த கல்வியாண்டு முதல் பல் சீரமைப்பு துறை, சமுதாய பல் பராமரிப்பு துறை ஆகிய 2 துறைகளில் புதிதாக முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் தொடங்க மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய பல் மருத்துவ கமிஷன் ஆகியவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல் இந்த 2 முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த கல்லூரியில் அனைத்து பல் மருத்துவ துறைகளிலும் முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் உள்ளன.

அரிய வாய்ப்பு

இந்த நிறுவனம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பல் மருத்துவ சிறப்பு பிரிவுகளிலும் முதுநிலை கல்வியை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இது பல் மருத்துவக்கல்வி, நோயாளி சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் சிறப்பான நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. எனவே புதுச்சேரி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.